இரு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
பேலியகொட காவல்நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துள்ளது.
பேலியகொட காவல்நிலையத்தில் பணிபுரியும் உப காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கும் காவல்துறை கான்ஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சந்தேகநபர் பேலியகொட காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரை இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபனமாகியுள்ளது.
இந்தநிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.