கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாள உலகக்குழுவினர் - செய்வதறியாது தவிக்கும் பொலிஸார்!
கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் பாதாள உலக் குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக இந்த நிலைமை தொடர்வதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட கொலைகளை மேற்கொள்வதற்கு முன்னர் வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்லத் தேவையான விசாக்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து சம்பந்தப்பட்ட கொலைகளை மேற்கொண்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்ற பல பாதாள உலக குழுக்கள் சார்ந்த கொலைகளுடன் தொடர்புடைய கொலையாளிகள் சிலர் 48 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். .
இதேவேளை, பாதாள உலக கொலைகாரர்கள் சிலர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த சில நாட்களில் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் வழிமுறையை கடைப்பிடித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சதுர்க என்ற பாதாள உலக கொலையாளி, அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரைக் கொன்று விட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டு வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே, இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரைக் கொன்ற பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட சுஜீயின் இரண்டு உதவியாளர்கள் கொலை நடந்த சில நாட்களிலேயே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.