அயோத்தி ராமர் கோவில் திறப்பு - அழைக்கப்பட்ட கிரிக்கட் பிரமுகர்கள் யார்?
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ள பயிற்சிப் போட்டியை ரத்து செய்து விட்டு, ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா எதிர்வரும் 22ஆம் திகதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்காக பல்வேறு முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை மூன்று முக்கியஸ்தர்களான சச்சின் டெண்டுல்கர், மஹேந்திரசிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விராட் கோலி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்குகொள்ளும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.
ஜனவரி 25ஆம் திகதியன்று டெஸ்ட் தொடர் போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு இந்திய அணி ஜனவரி 20ஆம் திகதி தொடக்கம் வலைப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதன்படி, விராட் கோலி எதிர்வரும் 20ஆம் திகதியன்று இந்திய அணியுடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார்
எனினும் 21ஆம் திகதி மாலை முதல் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் அயோத்தி சென்று அங்கே ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இதற்கு இந்திய கிரிக்கட் நிர்வாகமும் அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.
நடப்பு இந்திய கிரிக்கெட் குழாமில் விராட் கோலிக்கு மட்டுமே ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.