காங்கேசன்துறைக்கும்- நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் ஆரம்பம்!
காங்கேசன்துறைக்கும்- நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதில் சிவகங்கை (சிதம்பரத்தின் திருக்குளம்) என்ற பெயருடைய கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் முன்னர் கடந்த ஆண்டு இறுதியில் சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் சேவையில் ஈடுபடாது.
இந்த சிவகங்கை கப்பலானது பெப்ரவரி முதலாம் திகதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து நான்கு மணி நேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும் என்று இந்தப் கப்பல் சேவையை இயக்கும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். இது அந்தமானில் சிறு சிறு தீவுகளுக்கிடையே சேவையில் ஈடுபட்ட கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி திரும்பவுள்ளதாக தெரிவித்தார்.
150 பயணிகள் இந்தப் படகில் பயணிக்கமுடியும் என்பதுடன், ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செவ்லமுடியும். விரைவில் பயணச்சீட்டுக்கான முன்பதிவை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். வாரம் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் பராமரிப்பு பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படவுள்ளது.
ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய் அல்லது 26 ஆயிரம் இலங்கை ரூபாய் கட்டணமாக அறவிடப்படும். அரச வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின் விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் அதாவது சுமார் 18,500 ரூபா அளவுக்குக் குறைக்க விழைந்துள்ளோம்” என்றும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவராவார்.
இதேவேளை செரியாபானி கப்பலானது கொச்சின் சேவைக்கு மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையடுத்து அங்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.