பிணையில் விடுவிக்கப்பட்டார் அல்லு அர்ஜூன்!
புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டநிலையில், இன்று காலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிச 5ம் தேதி வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இதன் பிரீமியர் காட்சியை காண சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா அங்கு வந்ததால் அவர்களைக் காண மக்கள் கூட்டம் கூடியது. இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன்,திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் மீது சிக்கடபள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற போலீசார், விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து அங்கு வைத்து அவர் கைது செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர் . இந்த கைது நடவடிக்கை நாடு முழுவதும் பேசுபொருளானது.
மேலும், அல்லு அர்ஜூனை 15 நாட்கள் சிறை காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். மறுபுறம் , பிணை கோரி ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், விடுவிக்கப்படாமல் இருந்த அவர், இன்று காலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.