மருத்துவர் அர்ச்சுனாவின் அவதானத்திற்கு!
வைத்தியர் அர்ச்சுனா குறித்து எல்லோரும் எழுதிவிட்டார்கள்..
நானும் என் பங்குக்கு ஏதாவது எழுதவேண்டும்.. கடமைக்கு அல்ல இது ஒரு சமூகப் பொறுப்பு என தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா
தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பின்வருமாறு..
மருத்துவத்துறையில் அல்லது அவர் கூறும் குறைபாடுகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல.. எல்லா இடங்களிலும் உள்ளன.. என்ன அர்ச்சுனா அதனை அந்தத் துறையில் இருந்தே தட்டிக்கேட்டிருக்கிறார். தட்டிக்கேட்கவே வேண்டும்..
மருத்துவத்துறையில் கூடாதவர்கள் என்று ஒரு தரப்பினர் இருந்தாலும் தெய்வங்களாக பலரும் இருக்கின்றனர்.. ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் சீர்கேடானது என்று சொல்லிவிட முடியாது..
இப்போதும் கூட , அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு பதில்கள் தேவை.. அவற்றை இலகுவில் எவரும் தட்டிக்கழித்து விட முடியாது விடவும் கூடாது..
ஆனால், ஆரம்பத்தில் சமூக அக்கறையாக வெளிவந்த வைத்தியரின் குரல் , போகப்போக தனிப்பட்ட கோபதாபங்களை தீர்ப்பதுபோல அமைந்துவிட்டது பெருந் துயரம்..
பத்திரிகையாளனாக நான் ஒருபோதும் யாரும் பேசுவதை யாரும் கேட்கும்படி ஒலிபெருக்கியில் விடுவது கிடையாது.. அவர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்வது கிடையாது.. ( ஒலிப்பதிவு செய்யும் வசதி இருந்தாலும் )
அதனால் ஒலிப்பதிவு செய்து வெளியில் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை..
அப்படியே செய்திகளுக்காக ஒலிப்பதிவு செய்வதாயின் சம்பந்தப்பட்ட பிரமுகரிடம் அதனை சொல்லவேண்டும்..
அவர் அனுமதித்தால் மட்டுமே அதனை செய்ய வேண்டும்.. ஜனாதிபதி முதல் சாதாரண பிரமுகர் வரை நம்மை நம்பி எதுவும் பேசலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும்..
சாதாரண பத்திரிகையாளராகிய எங்களுக்கே அந்தளவு பொறுப்பு இருக்கவேண்டும் என்றால் மருத்துவ சேவையில் உள்ளோருக்கு எந்தளவு பொறுப்பு இருக்க வேண்டும்?
வைத்தியரின் தொலைபேசி அழைப்புகளின் குரல் பதிவு வெளியிடப்பட்ட பின்னர் அது சமூகவலைத்தள மீம்ஸ்களுக்கும் கேலி நகைச்சுவைகளுக்கு மட்டுமே வழி செய்தது.. பிரச்சினைகளைத் தீர்த்ததா?
இப்போதெல்லாம் யாரும் மருத்துவரை நம்பி பேசும் நிலையில் இல்லை..
மக்கள் பிரச்சினையை பேச வந்தவருக்கு மக்கள் அளித்த ஆதரவு இறுதியில், வழக்குக்கு சட்டத்தரணியை பேஸ்புக்கில் தேடுமளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது..
பிரச்சினைகளை தீர்க்க முற்படும்போது முதலில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது...
பிரச்சினைகளை நன்கு அறிந்த மருத்துவர் என்றால் முதலில் தனது கருத்துடைய ஏனைய மருத்துவர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் பலரை சந்தித்து அதற்கான ஆதரவை திரட்டியிருக்கலாம்..
இல்லையேல் அதை மாற்றும் அதிகாரம் கிடைக்கும் இடத்திற்கு சென்று அந்த அதிகாரத்தை எடுத்து நியாயத்தை நிலைநாட்டியிருக்கலாம்..
அதற்காக அவர் அரசியலுக்குள் வந்திருந்தாலும் ஏற்புடையதே..
இப்படி பல வழிகளில் அந்த தவறுகளை திருத்த நிரந்தர நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. அதைவிடுத்து பேஸ்புக் நேரலையோ அல்லது பேச்சுக்கு லைக்ஸ் கிடைப்பதோ ஒருநாள் முதல்வன் படம் போன்றதாகவே இருக்கும்..
இப்போதும் கூட தாமதம் இல்லை.. மருத்துவர் அர்ச்சுனா மக்களின் நண்பனாக இருத்தல் வேண்டும்.. அவரின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்..
அதற்கு இந்த சிஸ்டத்தை மாற்றுவது யார்? மக்களுக்காக போராடினார் என்று எவரும் தங்களது சொந்தப்பணத்தை வைத்தியருக்காக செலவிடப்போவதில்லை..
அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை தீர்க்கலாமா அல்லது மருத்துவரை தமது கட்சியில் சேர்த்து மக்கள் ஆதரவை வசப்படுத்தலாமா என்று யோசிக்கிறார்களே தவிர - மருத்துவர் சொன்ன பிரச்சினைகள் இன்னமும் அப்படியேதான் பாய் போட்டு படுத்துக்கிடக்கின்றன..
இந்த கருத்துகளில் மருத்துவர் அர்ச்சுனாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்..
எப்போதும் நாங்கள் உணர்ச்சிகர ரீதியில் விடயங்களை அணுகப் பழக்கப்பட்டவர்கள்.. யதார்த்தங்களை மறுப்பவர்கள்..
இலங்கையின் மருத்துவத்துறையும் அவரின் விடயங்களை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைத்தன்மையை , நியாயங்களை ஆராய வேண்டும்..
மருத்துவர் அர்ச்சுனாவும் , உசுப்பேத்துறவர்களிடம் உம்மென்றும் கடுப்பேத்துறவர்களிடம் கம்மென்றும் இருந்து தான் சொன்னதெல்லாம் நியாயமானவையே என்று நிரூபிக்க வேண்டும்..
அர்ஜுன ரணதுங்க ரீம் ஆக விளையாடியே வேர்ல்ட் கப் வென்றார்.. அப்படியொரு ரீம் வேர்க் இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது..
தனிமரம் தோப்பாகாது.. வைத்தியர் அர்ச்சுனாவின் சீரிய சிந்தனைக்கு இது செல்ல வேண்டும்.
பொறுத்தார் பூமியாள்வார் பொங்கியவர் காடாள்வார்..!
ஆர். சிவராஜா
தமிழன்- பிரதம ஆசிரியர்
தமது முகநூலில்..
17.07.24