'வளமான நாடு அழகான வாழ்க்கை' அதிகாரிகளுக்குப் பணிப்பு - வசந்த பியதிஸ்ஸ!
கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பொத்துவில் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ நேற்று (30) பொத்துவில் பிரதேசத்திற்கு விஷேட நேரடிக் கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் ஒருங்கிணைப்பாளர்களான ஏ.எஸ்.மஹ்றூப் மற்றும் ஆதம் சலீம் ஆகியோரின் ஏற்பாட்டின் பிரகாரம் பொத்துவில் துவ்வே பாலம் அருகில் ஆபத்தான நிலையில் காணப்படும் அணைக்கட்டின் சேதங்களைப் பார்வையிட்டார்.
அதனைச் சீர்செய்யத் தேவையான அவசர மற்றும் அவசியத் துரிதகதி நடவக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், அதன் நிலையான, நிரந்தர அபிவிருத்தி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து உடன் மேற்கொள்ளுமாறும் 'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற மகுடத்திற்கு மதிப்பளித்து மக்களின் பாதுகாப்பிற்கும், தேசத்தின் அபிவிருத்திக்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவ்விடத்தில் உத்தரவிட்டார்.
மேலும், பொத்துவில் சிங்ஹபுர கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் அக் கிராம மக்கள் முன்வைத்த 'அஸ்வெசும நலன்புரி' மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட ஏனைய தொழில் அபிவிருத்திகள் தொடர்பான கோரிக்கைகளையும் கேட்டறிந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும் உறுதியளித்தார்.
இதன்பின், பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மீனவர்களினதும், மீனவ சங்கங்களினதும் வேண்டுகோளுக்கமைய அறுகம்பை களப்பின் இறங்குதுறை தொடர்பாகவும், மக்கள் முன்வைத்த அப்பிரதேசத்தின் வெள்ள அனர்த்த முன் ஆயத்தப் பாதுகாப்புத் தொடர்பாகவும், அப் பிரதேசத்தின் உள்ளக வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யத்; தேவையான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
இதன்போது, பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் ராமக்குட்டி, பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் இருஸ்ஸத், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மீனவ சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.