'என்னை சுட்டு வீழ்த்துங்கள் - அரசாங்கத்துக்கு இனி ஆதரவு கிடையாது' - அர்ச்சுனா எம்.பி ஆவேசம் (காணொளி)
என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள்.
அப்படி கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள். இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது.
படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (23) சபையில் தெரிவித்துள்ளார்.
1980ஆம் ஆண்டுகளில் எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளார்கள்.
பல படுகொலைகளை செய்த தரப்பு இது என்றும், முடிந்தால் தன்னையும் கொலை செய்து விடுமாறும் தெரிவித்த அர்ச்சுான எம்.பி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான தமது மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்கு வழங்கிய முழு ஆதரவினையும் இன்றிலிருந்து முழுதுமாக மீளப் பெற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றிலிருந்து தான் முழுமையான எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்படுவதற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றதற்காக தனக்கு எதிராக இந்த அரசாங்கம் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதுவே ஒரு சிங்கள எம்.பி என்றால் இப்படி அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்றும் அர்ச்சுனா எம்.பி இதன்போது கேள்வி எழுப்பினார்.
அத்துடன், சுயேட்சைக் குழுவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட என்னைப் பார்த்து இந்த அரசாங்கம் பயப்படுகின்றது என்றும் சபையில் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் அவைத் தலைவர் பிமல் ரத்னாயக்க, 'எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை சபாநாயகரும் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய கட்சிகள்தான் கலந்துரையாடி பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆளும்கட்சி அதற்கான பொறுப்பினை ஏற்காது. இது உண்மையில் நாடாளுமன்றத்திற்கு வெட்கக் கேடான விடயமாகும்.
இதற்கு இன்றோ நாளையோ உரிய தீர்வு காணப்படாவிட்டால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும்' என்று பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
உடன் எழுந்து பதில் வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்படுத்திக் கொண்ட முறுகல் நிலையை நினைவுபடுத்தியவாறு தனது உரையை முன்வைத்தார்.
'நாடாளுமன்ற அர்ச்சுனா ராமநாதன் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தரப்பினருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அவர் (அர்ச்சுனா) அரசாங்க தரப்பில் இருந்தது போன்றும் இன்று முதல் அரசாங்கத்திற்கு தனது ஆதரவை வழங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும், அவருக்கான சந்தர்ப்பம் இனி முறையாக வழங்கப்படும்' என்றார்.