காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை - Feinjal புயல் தமிழ் நாட்டில் கரையை கடக்கும்!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை - Feinjal புயல் தமிழ் நாட்டில் கரையை கடக்கும்!

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நேற்றைய தினம் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியானது (Low Pressure Area) இன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well Marked Low Pressure Area) சற்று வலுவடைந்து தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 

அது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தற்போது நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளது. 

அதாவது தற்போது ஹம்பாந்தோட்டையிலிருந்து கிட்டத்தட்ட தென்கிழக்காக 550km தூரத்திலும், மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 600km  தூரத்திலும், திருகோணமலையிலிருந்து தென்கிழக்காக 670 km தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்காக 850 km தூரத்திலும் நகர்கிறது. 

இந்தநிலையில், சர்வதேச வானிலை எதிர்வுகூறல் விஞ்ஞானி Jason Nicholls அவர்கள் அனேகமாக Fengal புயல் தமிழ் நாட்டில் கரையை கடக்கும் என்கிறார். 

வங்கக்கடலில் புயல் உருவானால், அது இந்த பருவ காலத்தில் உருவான இரண்டாவது புயலாக இருக்கும். 

இந்த புயலுக்கு பெஃன்ங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.. இந்த பெயரை சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது.

இதனிடையே, ஜேசன் AccuWeather நிறுவனத்தின் எதிர்வுகூறல் முகாமையாளர் (Forecasting Manager) ஆவார். 

குறித்த புயல் இலங்கையை தாக்கும் வாய்ப்புகளை அவர் நிராகரிக்கவில்லை எனினும்,  இலங்கையை Fengal அடையுமாயின் அநேகமாக மட்டக்களப்பிலிருந்து புத்தளம் வரை நகரும் நிகழ்தகவு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவில் திணைக்களத்தின் ஓய்வுநிலை எதிர்வுகூறல் அதிகாரி சூரியகுமார், கடந்த 19ஆம் திகதி ஒரு பதிவை முன்வைத்திருந்தார். 

அதாவது இந்த தாழமுக்கமானது சில சந்தர்ப்பங்களில் ஒரு சூறாவழியாக உருவாகலாம். 

அவ்வாறு சூறாவளியாக உருவாகினால் இதற்கு சவுதி அரேபிய  நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Fengal (Pronounce as Feinjal) எனம் பெயர் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் சூறாவளியாக விருத்தி அடையும் சாத்தியம் ஓரளவு குறைவாகவே காணப்படுகின்றது.

அவ்வாறு சூறாவழியாக உருமாறினாலும் காற்றின் வேகம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காரணம் இந்த சூறாவளி ஆரம்ப நிலை சூறாவளியாகவே நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி அடைந்து வலுவான சூறாவளியாக இருக்காது. இதனால் காற்றின் வேகம் அதிகமாக இருக்காது. 

26 மற்றும் 27ஆம் திகதிகளில் அதிக மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மிக அதிக மழை பெய்யும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், 26 ஆம் திகதி அதிதீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது, இன்று காலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதியில் ஒரு தாழமுக்கமாக (Depression) விரித்தியடைந்துள்ளது என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கமானது இலங்கையில் இருந்து தென்கிழக்காக 500km தூரத்தில் காணப்படுவதாகவும் அந்த திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் அதாவது நேற்றைய தினம் (24) வடகிழக்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்பெருமாறு:

-மட்டக்களப்பு மாவட்டம் 

மட்டக்களப்பு நகர் - 65.3mm,
பாசிக்குடா - 67.0mm,
உன்னிச்சை -  43.0mm,
உறுகாமம் - 61.5mm,
வாகனேரி - 42.5mm,
கட்டுமுறிவுக்குளம் - 40.0mm,
நவகிரி ஆறு - 93.2 mm,
தும்பன்கேணி - 47.0mm.

திருகோணமலை மாவட்டம் 

திருகோணமலை - 151.9mm,
கடப்படைத்தளம் - 127.5mm,
குச்சவெளி - 165.5mm.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள்

திருநெல்வேலி - 16.5mm,
அச்சுவேலி - 53.9mm,
நைனாதீவு - 15.1mm,
யாழ்ப்பாணம் - 12.3mm,
நெடுந்தீவு - 9.0mm,
கிளிநொச்சி - 35.2mm,
ஆணையிறவு - 6.6mm,
தெல்லிப்பளை - 7.7mm,
அம்பன் - 16.3mm,
அக்கராயன்குளம் - 17.5mm,
இரணைமடு - 47.3mm,
முல்லைத்தீவு - 70.5mm,
அலம்பில் - 35.3mm,
ஒட்டுசுட்டான் - 24.3mm.