கல்முனை சிறுவன் மரணம்: கைதான பெண்ணுக்கு மீளவும் விளக்கமறியல்!
கல்முனை - இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான பொறுப்பாளர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு கல்முனை பதில் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவன் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டதாகவும், அதனையடுத்து தாம் அவரை தாக்கியதாகவும் சந்தேகநபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆலயமொன்றிலிருந்து விளக்குகளை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி கல்முனை - இஸ்லாமாபாத் பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுயநினைவின்றி இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்முனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் 14 வயதுடைய சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
பின்னர், சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், தாக்குதலால் இடம்பெற்ற உட்புற காயங்கள் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கல்முனை சிறுவர் நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பாளராக செயற்பட்ட பெண், எவ்வித தொழிற்பயிற்சியினையும் பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில், உள்ளக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பொறுப்பாளர் உரிய பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள போதிலும், எவ்வித தொழிற்பயிற்சி தேர்ச்சியையும் பெற்றிருக்கவில்லை.
பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றால் மாத்திரம் போதுமானதல்ல.
சிறுவர்கள் தொடர்பான விடயங்களை கையாள பொறுப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
எனவே, நாட்டில் உள்ள அனைத்து தடுப்பு மையங்களிலும் உள்ள பொறுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.