தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைவதே தமிழ்த் தேசிய செயல் வீரர் மகேஸ்வரனுக்கு பொருத்தமான அஞ்சலியாகும்

தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைவதே தமிழ்த் தேசிய செயல் வீரர் மகேஸ்வரனுக்கு பொருத்தமான அஞ்சலியாகும்!
அமரத்துவம் அடைந்த தமிழ் தேசிய செயல் வீரர் திரு. சதாசிவம் மகேஸ்வரனுக்கு நாடுகடந்த தமிமீழ அரசாங்கம் மரியாதை கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
தேசிய செயல்வீரர் சதாசிவம் மகேஸ்வரன் தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், கடற்புலி தளபதி கேணல் சூசை (தில்லையம்பலம் சிவநேசன்) ஆகியோருடன் நெருக்கமான நீண்டகால உறவை கொண்டவர். திரு. மகேஸ்வரன் மேற்படி மூவரினதும் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவர்.
தேசிய செயல்வீரர் மகேஸ்வரனும் அவரது குடும்பமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். மகேஸ்வரனின் இரண்டு சகோதரர்கள் மாவீரர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புகைப் படங்களை அறிமுகப்படுத்தி செழுமைப்படுத்திய மாவீரர் அர்ச்சுனா, மகேஸ்வரனின் இளைய சகோதரர் ஆவார். மணம்புரிந்த ஆரம்ப நாட்களிலேயே இலங்கை புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். ஐரோப்பாவில் கேணல் கிட்டு இருந்த காலத்தில் அவரது மொழிபெயர்ப்பாளராகவும், நம்பிக்கைக்குரிய உதவியாளராகவும் செயல்பட்டார்.
பொறியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற தேசிய செயற்பாட்டாளர் மகேஸ்வரன் பரந்த அரசியல் அறிவு கொண்டவர். பொருளாதார விடயங்களில் களத்தில் பல திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர், பாரிய நிதிப்பங்களிப்பையும் செய்தவர்.
தமிழக-ஈழத்து மீனவர்கள் பிரச்சனையில் மேற்படி இருதரப்பு மீனவர்களையும் சந்திக்கச் செய்து, பேச்சுவார்த்தைகளின் மூலமாக அவற்றைத் தீர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை தனது சொந்த செலவில் மேற்கொண்டவர். 2025 ஜனவரி நடுப்பகுதியில் இது தொடர்பாக தமிழகம் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்ததாக நாம் அறிகின்றோம். மீனவர் பிரச்சனை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினுடைய நிலைப்பாடும் இதுவே ஆகும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இம் முயற்சிக்கு
தலைமை தாங்கி செயற்படுத்த வேண்டும்.
திரு. சதாசிவம் மகேஸ்வரன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விடுதலை அமைப்புகளையும், கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். தற்போதைய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் சூழல் இவ் ஒன்றிணைப்பை வலியுறுத்துகின்றது. தேசியத் தலைவர் கூறியதுபோல், நான் பெரிது, நீ பெரிது என்று பாராது இனம் பெரிது என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
சொல்லும், செயலும் ஒருங்கு சேர்ந்த சிறப்பான ஆளுமையுடன், மாமனிதராக வாழ்ந்த மகேஸ்வரனுக்கு ஒன்றுபட்ட தமிழ்த் தேசியமே அவருக்கு பொருத்தமான அஞ்சலியாகும்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்! தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்!