தெல்லிப்பளையில் வாள்வெட்டு - மூன்று பேர் கைது!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குலுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வள்ளிபுரம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினர், குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், இதன்போது தாக்குதலுக்குப் பயன்படுத்திய வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்காம் திகதி தெல்லிப்பளையில் வாகனம் ஒன்றில் வந்த குழு உந்துருளியில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டக் குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தெல்லிப்பளை பகுதியில் வைத்து 6 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.