வாழைச்சேனையில் 40 வாகனங்கள் தீக்கிரை - சம்பவம் குறித்து தீவிர விசாரணை!

வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டி - 1, மோட்டார் சைக்கிள்கள் - 34, துவிச்சக்கரவண்டி - 8 என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் தீ பரவியதால் வெடிப்பு சத்தங்கள் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன் நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பேருந்தில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.

திடிரென ஏற்பட்ட இந்த தீ பரவல் சம்பவத்திற்கு காரணம் இது வரை கண்டயறிப்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளம் கண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் கிராம சேவகர் அ.பிரபு ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்தார்.

மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவலா என ஆய்வு செய்ததுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி மின் துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர், குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.