மின் தடை காரணமாக 600 கோடி ரூபாய் நேரடி பொருளாதார இழப்பு!
நாடு முழுவதும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சாரத்துறை அமைச்சு புறக்கணித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மின்சாரத்துறை அமைச்சுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் தாம் பதவியில் இருக்கும் போது மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்றைய தினம் சுமார் 5 மணித்தியாலங்கள் மின் தடை காரணமாக 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மின்சக்தி அமைச்சரும் செயலாளரும் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொத்மலை மற்றும் பியகமவுக்கு இடையிலான மின் பரிமாற்ற கட்டமைப்பு மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதன் காரணமாகவே நாடு முழுவதும் நேற்று மின்சார விநியோக தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட தரவு பரிசோதனைகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சார தடை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.