அரிய குமிழித்தூணில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதான குமிழித்தூணில் வருண பகவானின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

அரிய குமிழித்தூணில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த வருணன் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சுழி வட்டத்துக்கு உட்பட்ட உழக்குடி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், தாமரைக் கண்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டதில் இந்த  பழமையான வருணன் சிற்பத்தை கண்டறிந்தனர். 

இச்சிற்பம் தமிழகத்தில் இதுவரை அரிதாக கிடைத்துள்ள சிற்பங்களில் ஒன்றாகும். அதோடு, விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கூறுகையில், உழக்குடி அரசு மேல்நிலைப் பாடசாலைக்கு  எதிரில் மிகப்பெரிய கால்வாய் உள்ளது. 

இங்குள்ள பழமையான குமிழித்தூணில் குறித்த வருணன் சிற்பம் உள்ளது. வருண பகவான் இந்துக்களின்  மழைக்கு அதிபதியாகவும், அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

மேற்கு திசைக்கு உரியவரான வருணனின் வாகனமாக முதலை கொள்ளப்படுகிறது.

இவரின் மனைவியின் பெயர் வாருணி எனவும், பகவானை வழிபடும் போது தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கிறது என்பதும் பன்னெடுங்கால ஐதீகமாகும்.

3 அடி உயரமுள்ள இச்சிற்பத்தில் வருண பகவான் 4 கரங்களோடு காட்சி தருகிறார். தலையில் கரண்ட மகுடம் தரித்துள்ளார். 

மகுடத்துக்கு மேல் பூந்தோரணம் உள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. இடுப்பில் உதிரபந்தம், இரு கால்களிலும் தண்டை அணிந்து பீடத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார்.

நமது முன்னோர் அஷ்ட திக்கு பாலகர்களை அவர்கள் எதற்கு அதிபதியோ அதற்கு ஏற்றார் போல் அந்தந்த இடங்களில் அவர்களின் சிற்பங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர்.