போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே ரயில் தடம்புரள்வுக்கு காரணம்!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், ரயில் தண்டவாளத்தில் உள்ள ஆணிகளை கழற்றிச் செல்கின்றமை, ரயில் தடம்புரள்வுக்கு ஒரு முக்கிய காரணம் என ரயில் போக்குவரத்து திணைக்கள பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே, களனிவெளி ரயில் வழித்தடத்தில், ரயில் இயந்திரமும், மூன்று பெட்டிகளும் நேற்று தடம்புரண்டன.
இதையடுத்து, நேற்றும், இன்று காலையும் களனிவெளி வழித்தடத்தில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. இது மிகவும் மோசமான நிலையாகும்.
ரயிலில் பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், ஒரு சிலரால், தண்டவாளத்தில் உள்ள ஆணிகள் கழற்றி எடுத்துச் செல்லப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனிவெளி மார்க்கத்தின் ரயில் சேவைகள், வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து கொஸ்கம நோக்கி பயணித்த ரயிலொன்று, பேஸ்லைன் வீதி மற்றும் கொட்டா வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ரயிலை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ரயில் சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.