எதிர்காலத்தில் குறைந்தது 10 பல்கலைக்கழகங்களை உருவாக்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
எதிர்காலத்தில் குறைந்தது 10 பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் நாடாளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு தேவையான பாடங்களை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் அந்த பல்கலைக் கழகங்களின் ஊடாக வழங்கப்படுமெனவும் புதிய தொழில்நுட்ப கல்லூரிகளை நிறுவுதல் உட்பட கல்வித்துறையின் பல்வேறு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.