கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் மூன்றாம் கட்ட பணிகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்கு இன்னும் நிதி கிடைக்கப்பெறவில்லை என குறித்த வழக்கின் அகழ்வு பணியில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது கடந்த வருடம் 6ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 11 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அகழ்வு பணியினை கொண்டு செல்ல நிதி இல்லை - மார்ச் 4 தீர்மானம்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அகழ்வானது 1ம் 2ம் என இரண்டு கட்டங்களில் நடைபெற்றிருந்தது.
முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதைகுழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த அகழ்வு தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. வழக்கு எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கையில், அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணியினை கொண்டு நடத்த நிதி கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
மனித எச்சங்கள் 1994 தொடக்கம் 1996 ஆம் ஆண்டுகுரியவை
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
இன்றையதினம் இட்பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் த.பிரதீபனால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.
அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இருப்பினும் அதற்கான நிதி அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.