இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி இலங்கையில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி பவதாரிணி [வயது 47] சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
தனியார் வானொலி ஒன்றின் அனுசரணையிலான இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா கொழும்பு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இலங்கை புற்றுநோய் மருத்துவமனையில் அவர் காலமானார்.
கடந்த 5 மாதங்களாக அவர் உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடல் நாளை [26] மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
பாவதாரிணியின் கணவர் விருந்தக தொழில் அதிபராக உள்ளார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
ராமன் அப்துல்லா, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியிருந்தார்.
பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.
பின்னணி பாடகியாக மட்டும் அல்லாது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா இன்று இரவு குறித்த வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணியின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
பவதாரிணியின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பவதாரிணியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.