நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32 சதவீதம் வரை அதிகரிக்க திட்டம் - பவித்ரா வன்னியாரச்சி!
நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32 சதவீதம் வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21ஆம் திகதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா ஒரு செடியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன விரிவாக்க உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரேந்துப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தவும் எதிர்பார்ப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.