இரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவும்!

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவும்!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகளினதும் தெதுறுஓயா மற்றும் அத்தனுகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதேவேளை, ஹப்புத்தளை – பெரகலை வெல்லவாய வீதியின் விஹாரகல பகுதியில் கற்பாறை சரிந்துள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, அந்த வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு ஹைலெவல் வீதி, கொஸ்கம - ஹிங்குரல பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.