இராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டம்!
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, இராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாளை காலை (24) முதல் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தங்கச்சிமடத்தில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, இலங்கை கடற்பகுதிக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களில் ஐவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் மூன்று பேருக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒருவருக்கு ஒருவருடமும், மற்றையவருக்கு இரண்டு வருடகாலமும் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், நாளை முதல் சாகும்வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.