அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!
தொடர்ச்சியாக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பத்தேகமை பகுதியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நில்வளா கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக தல்கஹாகொடை மற்றும் பனதுகம ஆகிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் கலவெல்லாவ பகுதியிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், களனி கங்கை, மகாவலி கங்கை உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 13 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 125 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.