மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு!
புதிய காவல்துறை அதிபரின் நியமன விடயத்தில் மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் ஜனாதிபதியினால் நேற்று நியமிக்கப்பட்டார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன கடந்த வருடம் மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.
எவ்வாறாயினும், அவர் குறித்த பதவியில் 4 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், சீ.டி விக்ரமரட்ன கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், காவல்துறை மா அதிபருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் பதில் காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அவர் புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து அதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பு பேரவை காவல்துறை மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை.
ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.
முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை.
வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது.
4க்கு 2 என்பது சமமான வாக்குகள் அல்ல.
இதன்மூலம் இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.