சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் பிரசன்னம்!
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சற்றுமுன்னர் பிரசன்னப்படுத்தப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகிருந்தார்.
சுமார் 8 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தொடர்பில் போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் அவரையும் கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காணப்படுவதாக நீதவான் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்டோர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.