ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் நிர்வாக அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என போராட்டம்!

2023 - உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஜீரணிக்க முடியாத அளவில் படுதோல்விகண்டமையால் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழு மற்றும் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் நிர்வாக அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என போராட்டம்!

நேற்று முதல் போராட்டக்காரர்கள் கிரிக்கட் நிறுவனத்தை சுற்றிவளைத்து கோஷமிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 

இந்தநிலையில் இன்றைய தினமும் பல்வேறு தரப்பினர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக  அறிவித்துள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்த நிலையில், தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தெரிவுக்குழுவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

#கோ_ஹோம்_எஸ்.எல்.சி. என சமூக வலைதளங்களில் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரியுள்ளார்

இலங்கை அணியின் தோல்விக்கு, தேசிய தேர்வாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தசூழ்நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதன் மூலம் அவர் தனது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியுமா என்பது பிரச்சினையாக உள்ளது.