ஜப்பானில் 7 அமெரிக்கர்கள் உயிரிழப்பு - ஒஸ்ப்ரே ரக விமானம் விபத்து!
அமெரிக்க இராணுவத்தின் ஒஸ்ப்ரே ரக உலங்கு வானூர்தியொன்று ஜப்பானின் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி ஒருவர் உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்காஸ்-ஏசியா-பெசிவிக் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது அந்த வானூர்தியில் 08 பேர் பயணித்ததாக முன்னதாக கூறப்பட்ட போதும், பின்னர் அந்த எண்ணிக்கை ஜப்பான் கடலோர காவல்படையால் திருத்தப்பட்டது
இந்தநிலையில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்ததாக பின்னர் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள யகுஷிமா தீவின் கடற்கரையில் ஒஸ்ப்ரே (Osprey) ரக விமானம் விபத்துக்குள்ளானதாக ஜப்பானிய கடலோர காவல்படை கூறியதாக டோக்கியோவை தளமாகக் கொண்ட கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து இன்று (29) மதியம் 2:45 மணியளவில் தகவல் கிடைத்ததாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். (0545GMT)
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் உயிர் பிழைத்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
அப்பகுதியில் தேடுவதற்காக கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய கடலோர காவல்படை, ஒஸ்ப்ரே வானுர்தியின் அதிக அளவிலான பாகங்கள் கிடப்பதை உறுதிப்படுத்தியதாகவும், வெற்று உயிர் காப்பு படகும் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ககோஷிமா மாகாண அரசாங்கத்தின் கூற்றுப்படி, விமானம் விழும் போது இடது இயந்திரம் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.