உலக மக்களினது விடுதலைக்காகவும் உலகின் அமைதிக்காகவும் புனித விடுதலைப் பயணம்


உலக மக்களின் விடுதலைக்காகவும் உலகின் அமைதிக்காகவும்  ஆன்மீகம் கலாச்சாரம் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுடன் தமிழீழ மற்றும் பிரெஞ்சு மக்கள் இணைந்து மிகவும் கடுமையான குளிர் மழைக்காற்றுக்கு மத்தியில் உலக உழைப்பாளர் தினத்தில் அமைதியின் அரசியாம் மரி அன்னையை தாங்கிச்சென்று பிரான்ஸின் தெற்கு பகுதியில்  மூவாயிரம் அடிகளுக்கும் மேலேயுள்ள அரோ லூரான் ஆர்ட்டிங்குளோங் ஆகிய இடங்களின் மலைக் குன்றுகளுகூடாக அருட்தந்தை கில்லறி வெல்லம் அடிகளாரின் தலைமையில் புனித விடுதலைப் பயணம் ஒன்றை நிகழ்த்தி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்கள். அவற்றின் சில காட்சிகள் இங்கே. கடுங்குளிரிலும் துலூசில் இருந்து வருகை தந்த சிறுமிகளின் நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது. 


முன்னதாக காலை ஒன்பது மணிக்கு தேனீர் வழங்கலுடன் ஆரம்பமான பவனி அன்னையை உந்துருளியில் சுமந்தபடி மகிழூர்திகள் பின்தொடர நற்செய்தி மாதாவின் குன்றுக்கு சென்றடைந்து அங்கு புனித விடுதலைப் பயணக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறு வழிபாடு நிகழ்ந்தது.

தொடர்ந்து பவனி மீண்டும் அடை மழைக்கு மத்தியில் மலை வழிப்பாதைகளூடாக நீஸ் எனுமிடத்தில் ஆலயத்தில் அந்த இடத்தின் மேயர் தலைமையில் வழிபாடியற்றி சிறுமிகளின் நடனம் மற்றும் சிற்றுண்டி தேனீர் வழங்கப்பட்டது.

பின்னர் ஆர்டிங்குளோங் அன்னையை நோக்கி புறப்பட்டது. அங்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த  தற்காலிக கூடாரத்தில் அன்புறவுக்கூடுகை இடம்பெற்றது.  
வெவ்வேறு இடங்களில் இருந்தும் நெடுந்தொலைவில் இருந்து வந்திருந்த அனைவரும் ஒருங்கே தமக்கிடையே புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் அளவளாவினர். குறுகிய கால இடைவெளியில்  காலநிலை மாற்றங்களைத் தாண்டி அங்கு கலந்துகொண்டிருந்த மனிதர்களுக்கிடையேயான  ஒருமித்த உணர்வு நிலை அன்புறவுக்கூடுகையினூடான புனித விடுதலையை கட்டியம் கூறியது.

மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மதிய உணவுடனும் மனித நேயம் மிக்க மனிதர்கள் பால் வயது  இன் மொழி வேறுபாடின்றி ஆன்மீகத்திற்கு ஊடான விடுதலைப் பயணத்தில் இணைந்து உலக அமைதியை நிலை நாட்ட முடியும் எனும் நம்பிக்கை செய்தியை உணர்த்தியது இம்முறை மே தினம். அன்பு நெறி தழைத்தோங்க உழைப்போமாக.