மகிந்த ராஜபக்சவிற்கு ISIS அமைப்பினால் ஆபத்து!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரும் நேற்று (23) முதல் நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் இருந்து முப்படையினர் நேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, சட்டத்தரணி மனோஜ் கமகே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“2024ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நான்கு புலனாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அரசியல் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும், பாதாள உலக குழுக்களும் தொடர்ந்தும் செயற்படுவதாக” சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் குழுவிற்கு மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புத் தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
எனினும், அறிக்கைகளின் உண்மைகளை மறைத்து, இராணுவ பாதுகாப்பை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முற்றாக ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் இருந்து முப்படையினரை நீக்கவுள்ளதாக கடந்த 17ஆம் திகதி பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது