இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவர் யாழில் உயிரிழப்பு!

யாழில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை நோய் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவர் யாழில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்  - தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்ததாக மருத்துவமனைத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.

தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.