தமிழீழ காவல்துறை நிக்சன் ரஞ்சித்குமாரை நினைவுறுத்தும் தமிழினம்.

தமிழீழ காவல்துறை நிக்சன் ரஞ்சித்குமாரை நினைவுறுத்தும் தமிழினம்.

தமிழீழ காவல்துறை நிக்சன் ரஞ்சித்குமாரை நினைவுறுத்தும் தமிழினம்.

தமிழீழ நடைமுறை அரசில் சட்டம்,ஒழுங்கு,நீதியை நிலைநாட்டுவதற்காக எமது தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ காவல்துறையின் மாவட்ட கண்காணிப்பாளராக தகுதிநிலைபெற்ற இ.றஞ்சித்குமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சில் அவரது கல்லறை முன்றலில் நேற்றையநாள் நினைவுகூரப்பட்டது.

தமிழீழ காவல்துறை உருவாக்கம் பெற்ற 1991 காலத்தில் அதன் முக்கியத்துவம் உணர்ந்து அதில் இணைந்து முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை முடித்த ரஞ்சித்குமார் அவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே தனது நிர்வாகத் திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த காவல்துறை அதிகாரிக்குரிய தகமையைப் பெற்றிருந்தார்.

தொடக்கத்தில் பணிமனை அதிகாரியாக கடமையாற்றியவர் பல சேவைகளின் நிமித்தம் பெற்ற அனுபவத்தினூடு உயரதிகாரியாக சட்டம் நீதியை நிலைநாட்டுவதில் முன்னின்று செயற்பட்டார்.

சில நூறு எண்ணிக்கையினை உள்ளடக்கிய உறுப்பினர்களுடன் சேவையைத் தொடங்கிய தமிழீழ காவல்துறையினர் மாவட்ட ரீதியாகவும் தமது பணியினை விரிவுபடுத்தியபோது குறிப்பிட்ட சில உறுப்பினர்களுடன் மன்னார் மாவட்டம் சென்று அங்கும் சட்டம் நீதியை நிலைநாட்டுவதில் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார் 
நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள்.

1997 காலப்பகுதில் பெருமெடுப்பில் முன்னேறிவந்த சிங்களத்தின் ஜெயசிக்குறு நடவடிக்கை படையினரை எதிர்கொண்டு மோத எமது படையணிகள் தயாரானபோது தமிழீழ காவல்துறையின் ஒரு தொகுதியினர் பின்தளப் பணிக்காக அப்படையணிகளுடன் இணைக்கப்பட்டனர்.அதன்போது தமிழீழ காவல்துறையின் அவ்வணியினரை தலைமையேற்று களமுனைக்கு நகர்த்திச்சென்று பல மாதங்கள் முன்னரங்கப் பணிகளில் ஈடுபட்டு சிங்களத்தின் ஜெயசிக்குறு தடம்புரண்டு தடுமாற தேசப்பணியாற்றிய காவல்துறை கடமைவீரர்களில் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களின் பங்களிப்பும் காலத்தால் நினைவுகொள்ளப்படவேண்டியது.

தமது உயிரைப் பணயம் வைத்து தமிழீழ காவல்துறையினர் ஆற்றிய தேசப்பணியானது என்றுமே மறக்கப்பட முடியாத வரலாற்றுப் பதிவுகளாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இனங்காணப்பட்டு தமிழீழ காவல்துறை முகாம்கள் மற்றும் பணிமனைகள் சிறிலங்கா வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகியபோதும் தமது உயிரைப் பணயம் வைத்தே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழீழ காவல்துறை அரும்பணியாற்றியது.

2004 சுனாமி ஆழிப்பேரலையில் அகப்பட்டு இறந்துபோன மக்களையும் காயமடைந்தோரையும் மீட்பதற்கான பணியினை மேற்கொள்ள வட்டுவாகல் பாலத்தைக்கடந்து முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து மீட்புப்பணிகளை செவ்வனே செய்து தலைமையால் பாராட்டுப்பெற்றவர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள்.

2001 காலப்பகுதியில் தமிழீழ காவல்துறையின் புதிய பிரிவான சிறப்பு  அதிரடிப்படை தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டபோதும்,
2005 இல் காவல்துறை படையணி உருவாக்கத்தின்போதும் நிக்சன்
ரஞ்சித்குமார் அவர்களின் பங்களிப்பும் சேவையும் அதில் இணைந்திருந்தது.

2002 சமாதான காலப்பகுதியில் தேசியத் தலைவரால் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டு அங்கே உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் Queen Mary University Of London (QMUL)
மனித உரிமைகள் பற்றியும்,தடயவியல் கைரேகை தொடர்பான கற்கைநெறிகளையும் முடித்து தமிழீழத்திற்குத் திரும்பி தடயவியல் பொறுப்பாளராகவும் பதவியேற்று பணியாற்றியவர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள்.

போர்நிறுத்த காலங்களில் கைப்பற்றப்பட்ட சிங்கள இராணுவ முகாம்கள் அமைந்த பகுதிகளில் சிங்கள இராணுவத்தால் கடத்தி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுத்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி ,ஐக்கிய நாடுகள் சபைக்கும் மனித நேயம் பேசும் அமைப்புகளுக்கும் அனுப்பிவைத்து எமது போராட்டம் மீதான நியாயத்தை எடுத்தியம்புவதிலும்,சிங்கள இனவாத அரசின் இனப்படுகொலையை வெளிக்கொணர்வதிலும் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள் காட்டிய ஆளுமையான ஈடுபாட்டை  நன்றியுடன் தமிழினம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

2006 இல் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குரிய சமராய்வு நடவடிக்கைகளில் சமராய்வு பொறுப்பாளர் திரு.யோகரத்தினம் யோகி அவர்களுடன் இணைக்கப்பட்டு 
உயர்மட்ட விசாரணைப்பகுதி உருவாக்கப்பட்டபோது அதில் முதன்மையானவர்களுள் நிக்சன் ரஞ்சித்குமாரும் தேசியத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு அவ்விசாரணைப்பகுதியில் செயற்பட்டிருந்தார். தாக்குதல்களில் ஈடுபட்ட ஒவ்வொரு படையணி தளபதிகளிடமும்,போராளிகளிடமும் அத்தாக்குதல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு தேசியத் தலைவருக்கு அதனை வரைபுகளுடன் சமர்ப்பிக்கும் திறமையாளனாகவும் அவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும்,
விசுவாசமானவராகவும் செயற்பட்டிருந்தார் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள்.

2009 இறுதிப்போர் உக்கிரம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ காவல்துறையின் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராக உயர்பதவி வகித்த இவர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எதிர்கொண்ட எமது மக்களுக்கான மனிதநேயப் பணிகளை மே 17 இறுதிநாள்வரை நிறைவேற்றி வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பல்வேறு கொடும்வதைகளை அனுபவித்து நோயாலும் துன்புற்று சிறைமீண்டவரை சிங்களப் புலனாய்வினர் மீண்டும் விசாரணைக்காக விரட்டியபோது தலைமறைவாகி நாட்டைவிட்டு வெளியேறி புலம்பெயர்ந்து இத்தாலி ஜேர்மன் சுவிஸ் என அலைந்து அங்கெல்லாம் அரசியல் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட பிரான்சிற்கு வந்துசேர்ந்தார்.

புலம்பெயர் நாட்டின் காலநிலை மாற்றங்களும்,வேலைப்பளுக்களும் உடல் உபாதைகளை அதிகமாக்கியபோதும் தனது குடும்பத்தினர் இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்ந்துவந்தபோதும் இறுதிப்போரின் நேரடி சாட்சியமாக மாறி சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பை ஐக்கிய நாடுகள் சபைக்கும் மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளுக்கும் வழங்கிவைப்பதில் தனது இறுதிக்கணம்வரை அயராது பணியாற்றினார்.

தமிழீழ விடுதலைக்கான அரசியற் செயற்பாடுகளிலும்,தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு பல போராளிகளுடனும்,அரசியற் செயற்பாட்டாளர்களுடனும்,புத்திஜீவிகளுடனும்,ஊடக நண்பர்களுடனும் தொடர்புகளை மேற்கொண்டு தேசவிடுதலை நோக்கிய செயற்பாடுகளில் உத்வேகமும் நம்பிக்கையும் அளித்திருந்தார்.

எமது தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் மக்கள்மீதும்,
மண்மீதும் பற்றுக்கொண்ட இந்த உன்னத விடுதலைப் பணியாளர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களை தமிழினம் எத்தனை காலங்கள் கடந்துபோனாலும் என்றும் நினைவுறுத்தும்.