இலங்கையை நோக்கி நகரும் காற்று சுழற்சி - 9ஆம் திகதிவரை கனமழை!
வலுவான கீழைக்காற்றின் வருகை காரணமாக இன்று (05) பிற்பகல் முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அடை மழை பொழியும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கையின் தெற்காக இலங்கை கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 5.8km தூரத்தில் நிலைகொண்டிருந்த காற்று சுழற்சியானது அந்த பகுதியில் இருந்து இலங்கை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மேலும் ஒரு காற்று சுழற்சியும், அந்தமான் கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்னும் ஒரு காற்று சுழற்சியும் உருவாகியுள்ளது.
இந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் இலங்கையை சற்று அண்மிக்கின்ற காரணத்தினால் நாளை தொடக்கம் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.