இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானம்!
இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மின்சார கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையிடம் முன்வைத்திருந்தது.
எனினும், அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகியதையடுத்து, குறித்த கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் நிலவியது.
இந்த சிக்கல் தொடருமானால், தற்போது அமுலில் உள்ள கட்டணத்தை திருத்தம் இன்றி தொடர்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்திருந்தது.
இந்தநிலையில், அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்தே, மின்கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Update >>>
• வீட்டு மின் பானையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவுக்கு 65 சதவீத கட்டணக் குறைப்பு. ஒரு அலகு 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும்.
• 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42ல் இருந்து 32 ரூபாவாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும்.
• 91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு, ஒரு அலகு 42 ரூபாவிலிருந்து 35 ரூபாயாகவும், மாதாந்த நிலுவைக் கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
• மத வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைப்பு.
குறைந்த நுகர்வு கொண்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு அலகு 10 ரூபாய். (30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது).
மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை உடனடியாக நிறுவ மின்சார சபை மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனத்திற்கு நிபந்தனைகள்
• ஹோட்டல் துறைக்கு 26.3 சதவீத கட்டணம் குறைப்பு
• கைத்தொழில் துறைக்கு 9 சதவீத கட்டண குறைப்பு
• வணிக கட்டிடங்களின் மின்சார கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படும்
• அரச கட்டிடங்களின் மின்சார கட்டணம் ஒரு சதவீதத்தால் குறைக்கப்படும்