இந்திய - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இருதரப்பு கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (24) கடிதம் எழுதியுள்ளார்.
இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இதுபோன்று கைது செய்யப்படுவதை தவிர்க்கவும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும் உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கை குழுவை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.