சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர்
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது .
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதியளிதிருந்தது .
இதனையடுத்து முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு நாணய நிதியம் ஒப்புதல் அளித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழு நாட்டுக்கு வருகைதந்து, பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தினர்.
அந்தவகையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் மற்றும் நிபந்தனைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்நிபந்தனைகளின் அமுலாக்கம் என்பவற்றின் விளைவாக நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி குறித்தும் நாணய நிதிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எடுத்துரைத்துரைத்தனர்.
அதேபோன்று நாணய நிதிய நிபந்தனையின் பிரகாரம் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடன் இன்னமும் இணக்கப்பாடொன்று எட்டப்படாமை பற்றியும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.