மோடியிடம் - முகமது முய்சு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மாலைதீவு எதிர்க்கட்சி கோரிக்கை!
மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் முறுகலுக்கு மத்தியில், மாலைதீவு ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பதிலாக ஐரோப்பாவில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு மாலைதீவு திட்டமிட்டு வருவதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி முகமது முய்சு தலைமையிலான ஆளும் கட்சி சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும், மாலைதீவின் எதிர்க்கட்சி இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாலைதீவின் தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை கூச்சலுக்கும் பெரும் விவாதத்திற்கும் காரணமாக இந்தியாவும், சீனாவும் மாறும் அளவுக்கு மாலைதீவு அரசியலில் ஆழமாக இந்த இருநாடுகளும் வேரூன்றியுள்ளன.
இந்த விவகாரத்தில் சமீப நாட்களாகவே மாலைதீவு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் முகமது முய்சுவை எதிர்த்து வருகின்றனர்.
இந்தியா குறித்தான முய்சுவின் அணுகுமுறை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மிகுந்த எதிர்ப்புக் கொள்கையுடன் உள்ளனர். அதே சமயத்தில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சியான ஜம்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம், முகமது முய்சு இந்தியாவிடமும் பிரதமர் மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தியா - சீனா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.