இலங்கையில் இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்று (12) பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையில் இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக 33,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமை மையத்தின் தகவல்படி மழையின் காரணமாக இதுவரையில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக நூற்றுக் கணக்கானவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குராங்கொடை – 70 ஏக்கர் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதான பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் குழந்தையும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மழை வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான இரண்டு தபால் ரயில் சேவைகள் நேற்றிரவு இடைநிறுத்தப்பட்டன.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை செல்லும் உதய தேவி அதிவேக ரயிலும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரும் ரயிலும் இன்று (12) இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதன் உச்சக்கட்டத்தை கடந்த 10ம் திகதியே அடைந்துள்ளது.

இதனால் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், அதனை அண்டிய பிரதேசங்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்ஓயாவை அண்டிய தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வாகன சாரதிகளும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பொல்வத்தை, பஹலந்த, இரக்காமம், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைத்தீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை போன்ற பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

மீள் அறிவித்தல் வரையில் கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அப்பாலுள்ள அதன் விஞ்ஞான பீடம் மாத்திரம் திறக்கப்பட்டிருக்கும்.

வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், வெள்ளம், மண் மற்றும் கற் சரிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.