கேரள மண்சரிவில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு!
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது.
அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
குடியிருப்புகள் இருந்த தடமே இல்லாமல் சேதமடைந்துள்ளன. முண்டக்கை பகுதியில் அனைத்து இடங்களும் மண், மரங்கள் மற்றும் பாறைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 28 குழந்தைகள் உள்ளிட்ட 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.
வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கோழிக்கோடு மாவட்டம் விளங்காடு பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட மாவட்ட ஆட்சியர் சென்ற போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆட்சியரை, மீட்பு படையினரின் கயிறு கட்டி மீட்டனர்.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உலங்கு வானூர்தியில் சென்று பார்வையிட்டார்.
கோழிக்கோட்டில் இருந்து வயநாட்டிற்கு உலங்கு வானூர்தியில் சென்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் வேணு, டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் ஆகியோர் உடன் சென்றனர்.
இந்தசூழ்நிலையில், பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை வாழும் காளிதாஸ் மற்றும் கூடலூர் அய்யன்கொள்ளியில் வாழும் கல்யாணக் குமார் ஆகியோர் கேரளா வயநாடு நிலசரிவில் சிக்கி உயிரிழந்துள்ளமை கவலையளிக்கிறது.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ள கூடலூர் காளிதாஸ் மற்றும் கல்யாணக் குமார் ஆகியோர் நான் கூடலூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் எனது கூட்டத்திற்கு சமூகமளித்தது என் மனதில் நினைவளிக்கிறது.
எதிர்பாராது ஏற்பட்டுள்ள இவர்களது இழப்பு கவலையளிப்பதுடன், இவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என செந்தில் தொண்டமான் பதிவிட்டுள்ளார்.