பிரான்ஸில் திருவள்ளுவர் திருவுருவச்சிலையை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!
வள்ளுவர் என்றும் அழைக்கப்படும் திருவள்ளுவர், தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக புகழ்பெற்ற இந்திய கவிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார். பிரான்சின் செர்ஜி நகரில் அவரது சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வொரெயால் தமிழ் கலாசார மன்றத்தின் தலைவர் இலங்கை வேந்தனின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ஜீன்ஸ்டன், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸிற்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப், தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் அயலக கல்வி பிரிவின் தலைவர் கலாநிதி குறிஞ்சி வேந்தன், பிரான்ஸ் நாட்டின் அரசியல், கலாசார, இலக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த அரசியல், கலாசார, இலக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
ஜூலை மாதம் பாஸ்டில் தினத்திற்காக பாரிஸ் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியை இந்த சிலை திறப்பு விழா "செயல்படுத்துகிறது" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.
"பிரான்ஸின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா பாஸ்டில் தினத்திற்கான தனது பயணத்தின் போது அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியை செயல்படுத்துகிறது.
இந்த சிலை திருவள்ளுவரின் உன்னத சிந்தனைகளைப் பின்பற்ற பலருக்கு வழிகாட்டும் மற்றும் நமது நீண்டகால கலாச்சார இணைப்புகளின் மற்றொரு அடையாளமாகும். இந்தியா-பிரான்ஸ் நட்புறவின் முக்கிய தூணாகவும் அது அமையும்" என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த சிலையை பிரான்ஸ் தமிழ் கலாச்சார சங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.