பங்களாதேஷின் 'ஏழைகளின் வங்கியாளர்' யார்? Re Entry கொடுப்பாரா ஷேக் ஹசீனா?

பங்களாதேஷின் 'ஏழைகளின் வங்கியாளர்' யார்? Re Entry கொடுப்பாரா ஷேக் ஹசீனா?
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்றவரும், ஷேக் ஹசீனாவின் நீண்டகால அரசியல் எதிரியுமான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஹசீனா பதவி விலக வேண்டும் என்று பல வாரங்களாக பங்களாதேஷில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
 
இதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே, 84 வயதான முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நாட்டின் குறுங்கடன் பயன்பாட்டின் முன்னோடி என பலரால் பாராட்டப்பட்ட பேராசிரியர் யூனுஸை, ஒரு பொது எதிரியாகக் கருதினார் ஹசீனா.
 
யூனுஸ் மீது பல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
 
ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், மேல் முறையீடு செய்து, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் யூனுஸ்.
 
‘அரசியல் ரீதியாக என் மீது போடப்பட்ட வழக்கு’ என்று யூனுஸ் அதை விவரித்திருந்தார்.
 
இந்தநிலையில், பங்களாதேஷ் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய மாணவர்கள், இராணுவம் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை ஏற்க மறுத்து, பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர்.
 
அதிபர் முகமது ஷஹாபுதீன், இராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பேராசிரியர் யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
 
"இவ்வளவு தியாகம் செய்த மாணவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசை வழிநடத்துமாறு என்னைக் கோரும் போது, ​​நான் எப்படி மறுக்க முடியும்?" என பேராசிரியர் யூனுஸ் கூறியிருந்தார்.
 
மருத்துவ சிகிச்சைக்காக பாரிஸ் சென்றுள்ள யூனுஸ், உடனடியாக டாக்கா திரும்புவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 
பங்களாதேஷத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் சிவில் ​சேவைகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுடன் தொடங்கிய போராட்டங்கள், ஒரு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியது.
 
அரசுப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
திங்கட்கிழமை மட்டும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது பங்களாதேஷத்தின் கறுப்பு நாளாக அமைந்தது. நூற்றுக்கணக்கான காவல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
 
தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியா சென்றார். இதன் மூலம் அவரது 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
 
கடந்த பத்தாண்டுகளில் ஒருபுறம் வங்கதேசத்தின் பொருளாதாரம் வளர்ந்தாலும், மறுபுறம் முன்னாள் பிரதமர் ஹசீனா தன்னை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்கி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்ததாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.
 
முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமூக ஆர்வலர் அஹ்மத் பின் குவாசெம் போன்றோர் ஹசீனா அவசரமாக வெளியேறிய உடனேயே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
 
ஹசீனா ஆட்சியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்று கூறி, 2014 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான ‘பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்’ தலைவர் தான் கலீதா ஜியா.
 
78 வயதான அவர் 2018இல் ஊழல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறியிருந்தார்.
 
இந்தியாவுடனான ஹசீனாவின் உறவு
ஹசீனா இந்தியாவுக்கு சென்றது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லைக்கு அப்பாலிருந்து இவர் என்ன ஆலோசனை பெற்றார் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால், வங்கதேசத்தின் நீண்ட நாளைய முக்கிய நேச நாடு, இவருக்கு ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்தது.
 
இதனால் தான் வங்கதேசத்தில் ஹசீனாவின் செல்வாக்கு குறைந்த பிறகு, இந்தியாவுக்கு எதிரான வலுவான குரல் வளர்ந்து வருகிறது.
 
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்வதால், தனது சொந்த பாதுகாப்புக்காக வங்கதேசத்தின் மீது எப்போதும் டெல்லிக்கு ஒரு கண் இருந்தது. ஹசீனா தன் நாட்டின் வழியே அந்த மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டுசெல்ல இந்தியாவுக்கு அனுமதி வழங்கி இருந்தார்.
 
இந்தியாவின் மிக முக்கிய பிரச்னையாக இருந்த, வங்கதேச இந்திய எதிர்ப்பு போராட்ட குழுக்களை ஹசீனா கட்டுப்படுத்தினார்.
 
சமீபத்திய வாரங்களில், வங்கதேசத்தில் செல்வாக்கு குறைந்து வரும் ஹசீனாவை ஆதரிப்பதா வேண்டாமா என்பதில் இந்தியாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால், பெரும் மக்கள் போராட்டத்தில் இருந்து தள்ளி இருந்தால் வங்கதேசத்துடனான நீண்ட நாள் நல்லுறவு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. ஹசீனாவின் ராஜினாமா அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியுள்ளது.
 
இந்த சூழ்நிலையில், பங்களா​தேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனியார் ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர், “இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்து விட்டார்.
 
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார்.
 
அவர் இந்த நாட்டையே தலைகீழாக மாற்றினார். அவர் ஆட்சிக்கு வரும்போது இது ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக இருந்தது.
 
ஏழை நாடாக கருதப்பட்டது. ஆனால் இப்போது இந்த நாடு ஆசியாவின் அதிகம் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
 
நேற்று மட்டும் கலவரத்தில் 13 பொலிஸார் உயிரிழந்தனர். கலவரக்காரர்கள் மக்களை கொல்லும் போது பொலிஸார் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று சஜீப் வஜீத் கேள்வியெழுப்பினார்.
##bangladeshquothamovement #Bangladesh ##BangladeshArmy #bangladeshmilitary ##Bangladeshstudents