சினோபெக் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி?

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அனுமதியளிக்கும் என எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சினோபெக் நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதி?

ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் திங்கட்கிழமைக்கான நிகழ்ச்சி நிரலில் இந்த யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது. 

 அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியவுடன் அது தொடர்பான ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியில் இலங்கை, புதிய முதலீடு மற்றும் உள்ளூர் எரிபொருள் விநியோகஸ்தர்களை எதிர்பார்த்துள்ளது. 

இந்தநிலையில், சினோபெக்கின் சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு அதற்கு மேலும் வலு சேர்க்கும். 

உலகின் முன்னணி சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி நிலையத்தை கொண்டுள்ள சினோபெக் நிறுவனத்தின் முதலீடு, இலங்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமையுமெனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிறுவனம் சவூதி அரேபியாவில் சுத்திகரிப்பு நிலையத்தையும் ரஷ்யாவில் கனியவள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையையும் கொண்டுள்ளது. 

 இதேவேளை, அதிகாரப்பூர்வ அனுமதியை பெற்ற பின்னர், சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு விடயங்களை இறுதி செய்வது உட்பட அடிப்படை பொறியியல் வடிவமைப்பை சினோபெக் ஆரம்பிக்கும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான உரிமையை கடந்த ஒகஸ்ட் மாதம் ஏலத்தின் மூலம் சினோபெக் பெற்றுக்கொண்டது.