அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்!
1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அமெரிக்க ஊடகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது மனிதாபிமானப் பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர், 1976 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் ஃபோர்டை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார்.
முன்னதாக கலிபோர்னியா ஆளுநராக பணியாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான ரொனால்ட் ரீகனால் 1980 தேர்தலில் கார்ட்டர் தோற்கடிக்கப்பட்டார்.
கார்ட்டரின் மறைவு குறித்து அவரது புல்வர் சிப் கார்ட்டர் இட்டுள்ள பதிவொன்றில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” என்று கூறியுள்ளார்.
கார்ட்டர், அண்மைய ஆண்டுகளில், கல்லீரல் மற்றும் மூளைக்கு பரவிய மெலனோமா உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் தொடர்ந்தும் போராடி வந்தார்.
அவர் 2023 ஆம் ஆண்டில் தீவிர நோய்வாய்ப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வகை சுகாதாரப் பராமரிப்பைப் பெற முடிவு செய்தார்.
மேலும் கூடுதல் மருத்துவ தலையீட்டிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் தீர்மானித்திருந்தார்.
2023 நவம்பர் 19 அன்று, 96 வயதில் உயிரிழந்த அவரது மனைவி ரோசலின் கார்டரின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொண்டார்.
இதன்போது அவர் பலவீனமான நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
எவ்வாறெனினும், கார்ட்டர் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர், மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதியையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற சிறப்பை அடைந்தார்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதைத் தவிர, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
ஓவல் அலுவலகத்தில் (அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகம்) அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றியது இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் உடன்படிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பை நல்கியது.
இது இரு நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவும் உதவியது.
எனினும் ஒரு பொருளாதார மந்தநிலை, அவரது செல்வாக்கற்ற தன்மை மற்றும் 1979 ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை அவருக்கு எதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.
மேலும் அவர் 1980 அமெரிக்க தேர்தலில் ரீகனிடம் தோற்று வெளியேற்றப்பட்டார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர் மேலும் அதில், கார்டரை “அசாதாரண தலைவர், அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானவாதி” என்றும் நினைவு கூர்ந்தனர்.
அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கார்ட்டர் தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட தலைவர் என்று கூறினார்.
கார்ட்டர் ஒரு பிரபலமற்ற ஜனாதிபதியாக பதவியை விட்டு வெளியேறினார், ஆனால் அவரது பதவிக்காலத்திற்குப் பின்னர், அவர் மனிதாபிமான காரணங்களுக்காக பல தசாப்தங்களாக ஆர்வத்துடன் பணியாற்றினார்.
அடுத்த ஆண்டுகளில், கார்ட்டர் ஒரு மனித உரிமை சாம்பியனாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், மேலும் பின்தங்கியவர்களுக்கான குரலாக பிரபலமடைந்தார்.
அவர் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார் மற்றும் முன்னோடியில்லாத புகழ் பெற்றார், இது ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது கூட அவரால் அடைய முடியாத பெருமிதம் ஆகும்.